மூன்றாம் மாத ஒருங்கிணைந்த பரிசோதனை என்பது நுண்ணொலி மூலம் சிசுவின் அளவுகளயும், சிசு சுரக்கும் ஹார்மோன்கள் தாயின் இரத்தத்தில் இருக்கும் அளவுகளையும் கொண்டு, கர்ப்பத்தில் ஏற்படுகின்ற சில முக்கிய சிக்கல்களுக்கான வாய்ப்பு என்ன என்பதனைக் கணிப்பதே.

சில வருடங்களுக்கு முன்பு வரை, இப்பரிசோதனையின் ஒரே குறிக்கோள், டவுண் சின்றோம் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு மட்டும் கணிப்பதாக இருந்தது – பல ஆண்டு மருத்துவ ஆராய்ச்சியின் பலனாக, இன்று இப்பரிசோதனையின் பயன் மும்மடங்காக பெருகி உள்ளது:

  1. உங்கள் சிசுவிற்கு டவுண் சின்றோம் குறைபாடு இருப்பதற்கான தனிப்பட்ட வாய்ப்பு
  2. கர்ப்பிணிக்கு பின்னாளில் (7 அல்லது 8ஆம் மாதத்தில்) ப்ரீ எக்ளாம்சியா எனப்படும் இரத்த அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பு
  3. சிசுவின் உடல் அமைப்பில் இந்த நிலையில் தெரிய வரக்கூடிய பெருங்குறைபாடுகள்

ஆகிய இவற்றைக் கண்டறிவதே ஆகும்.

மூன்றாம் மாத ஒருங்கிணைந்த பரிசோதனையில் சிசுவின் பின் கழுத்து நீர் அளக்கப்படும்

இப்பரிசோதனைக்கு வேறு பல பெயர்கள் உள்ளன:

  • ஒருங்கிணைந்த பரிசோதனை
  • நியூக்கல் பரிசோதனை
  • என் டி பரிசோதனை
  • டவுண் சின்றோம் பரிசோதனை

இவை யாவும், இப்பரிசோதனையின் வளர்ச்சியின் வெவ்வேறு நிலையில் இருந்த பெயர்களே.

ப்ரீ எக்ளாம்சியா என்பது, கர்ப்ப காலத்தில் மட்டும் தாய்க்கு ஏற்படக்கூடிய தீவிர இரத்த அழுத்த நோய். இது, நூறு கர்ப்பிணிகளில் 5 முதல் 8 கர்ப்பிணிகளுக்கு ஏற்படும். இது பொதுவாக, 7 அல்லது 8 ஆம் மாதத்தில்தான் வெளிப்படும். இந்நோய் வருவதற்கான வாய்ப்பு முன்பே தெரிந்து கொண்டால், அதைத் தடுக்க சிகிச்சை உண்டு.

மூன்றாம் மாத முடிவில், சிசுவின் உடல் உறுப்புகள் பெருமளவில் உருவாகி வரும். துல்லியமாக பரிசோதனை செய்வதன் மூலம், பெரிய அளவு குறைபாடுகளில், 80% இப்பருத்திலேயே கண்டறிகிறோம்.

தாயின் இரத்தத்தில் சிசுவின் ஹார்மோன்கள் பரிசோதிக்கப்படும்

ஆதலால், ஒருங்கிணைத்த பரிசோதனை சரியான முறையில் செய்யப்பட்டு இருப்பின்,

  1. நூற்றில் 90 டவுண் சின்றோம் சிசுக்களையும்
  2. நூற்றில் 80 பெரிய அளவு குறைபாடுடைய சிசுக்களையும்
  3. நூற்றில் 90 ப்ரீ எக்ளாம்சியா வரவிருக்கும் கர்ப்பிணிகளையும்

மூன்றாம் மாதத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்றார்போல் செயல்பட முடியும்.

பொதுவாக இப்பரிசோதனைக்கு, 30 – 40 நிமிடங்கள் தேவைப்படும்.

இப்பரிசோதனைப் பற்றிய தமிழ் விளக்க விழியம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.